104இராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை - Yarl Thinakkural

104இராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை

துருக்கியில் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவானுக்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவ புரட்சியில் பங்கேற்ற இராணுவ வீரர்கள் 104பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துருக்கியில் ஜனாதிபதி எர்துவான் தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அவர் பத்திரிகை சுதந்திரம், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து சர்வாதிகார போக்குடன் செயற்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் இராணுவத்தின் ஒரு பிரிவினர் நள்ளிரவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள இராணுவ தலைமையகத்துக்கு சென்ற புரட்சிப் படை வீரர்கள் தலைமைத் தளபதி ஜெனரல் ஹ_லுசி ஆகாரை சிறைப்பிடித்தனர்.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அறிந்த ஜனாதிபதி எர்துவான் நள்ளிரவு சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடம் பேசினார். பொது மக்கள் யாரும் வீட்டில் முடங்க வேண்டாம். வீதியில் இறங்கி புரட்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு எதிராக போரிடுங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஆளும், எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் தலைமையில் பொதுமக்கள் வீதியில் இறங்கி இராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புரட்சிப் படையைச் சேர்ந்த 100வீரர்கள் உயிரிழந்தனர். எர்துவானின் ஆதரவாளர்கள் 165பேர் உயிரிழந்தனர். ஒட்டு மொத்தமாக 265 பேர் பலியாயினர். இராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக 2,800இற்கும் மேற்பட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

Previous Post Next Post