கர்நாடகாவில் ஆட்சியமைக்க 100கோடி பேரம் பேசும் பா.ஜ.க. - Yarl Thinakkural

கர்நாடகாவில் ஆட்சியமைக்க 100கோடி பேரம் பேசும் பா.ஜ.க.


கர்நாடகத்தில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்களை இழுக்க ரூ.100கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பா.ஜ.க. வலைவிரிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எக்கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும்பான்மை எக்கட்சிக்கும் கிடைக்காத நிலையில், 104இடங்கள் பெற்ற பா.ஜ.க.வை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்ற நோக்கில் 78இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது.
காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்றுஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க கோரினார்கள். அதேசமயம் தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பா.ஜ.க.வினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள். இந்நிலையில் 104இடங்களில் வென்ற பா.ஜ.க. ஆட்சி அமைக்க இன்னும் 8எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதுமானது. ஆதலால் காங்கிரஸ், ம.ஜ.த. எம்.எல்.ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்சியின் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Previous Post Next Post